Wednesday 19 December, 2007

அறிவுமதி- கவிதைகள் நட்புக்காலம்



1) உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து
அட்டைகளில்
நல்ல வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என்
கவிதை.


2)நீ
என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில் தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை.

3)அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
இதயங்களின்
நட்பில் இருக்கிறது!

4) நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள்
நீ.

5) உன்னுடன்
சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகு தான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின் மௌனத்திலும் நான்
இசை
கேட்க
ஆரம்பித்தேன்.

6)பள்ளி மைதானம்
காலை
வணக்கம்
காற்று கலைத்ததை
கண்களால்
மூடினேன்.

7)இதயம் சேகரித்துக்
கொண்டிருந்த
வானத்தில்
நீ
பறக்கத் துடிக்கையில் அசைந்த
புற்களின்
நடுவே தான்
அமர்ந்திருந்தது
நம் நட்பின்
முதல் நாள்.


8)நம்மைப் பற்றிய
ஆசிரியர்களின்
சந்தேகங்களுக்கு
துணையாய்
புத்தகங்களைப்
படபடக்கச் சொல்லிவிட்டு
நிதானமாய்
பேசிக்கொண்டிருந்தோம்
நாம்.

9)அனைத்துக் கல்லூரிப்
போட்டிகளுக்கான
பங்கேற்பிற்காகத்
தற்செயலாக
அமைந்த
அந்தத்
தொடர்வண்டிப் பயணத்தில்
என்
தோள் வாங்கித்
தூங்கிய
உன் மூடிய விழிகளில்
விழித்தேன்முதன்முதலாய்
நான்.

10)அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே...
“எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்டநண்பன்”
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்.

11)தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்.

12) எனது காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு.

13)புரிந்து கொள்ளப்படாத
நாட்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தானாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன்
புன்னகை.

14)நீ
நிருபித்த
பெண்மையிலிருந்து
வாய்த்தது
நான்
மதிக்கும்
ஆண்மை.

15) பால் வாசனையில்
அம்மா.
அக்குள்
வாசனையில்
துனைவி.
இதயத்தின்
வாசனையில்
நட்பு.

16) நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காங்கள்
உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்.

17) கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனை கண்களுக்கு
வாய்த்திருக்கும்.
18) பார்வையாளர் நாள்
குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்குத் துணையாய் இருந்த
உன் விடுதி
அணிலுக்கு
இப்போதும்
ஞபகம் இருக்குமா
என்னை.

19) உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும் தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன.

20) போக்குவரத்து அதிகமுள்ள
அந்தச் சாலையோரத்தில்
நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்.
21)எனக்கு மட்டும் என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
வெளிவாங்கிப்
பூக்கிறது
நட்பு.
22) தேர்வு முடிந்த
கடைசி நாளில் நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒருநட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று.
23) கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக்
கண்டதும் எப்படி
இவ்வளவு
இயல்பாய்
தூங்கிவிடுகின்றன.
24) தாய்ப் பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது
தாய்மைக்கான
விதை
நட்பில் இருக்கிறது.
25)காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று.
26) பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்.
27) அந்த நீண்ட பயணத்தில்
என் தோளில் நீயும்
உன் மடியில் நானும்
மாறிமாறி
தூங்கிக்கொண்டு வந்தோம்
தூங்கு என்று
மனசு
சொன்னதும்
உடம்பும்
தூங்கிவிடுகிற
சுகம் நட்புக்குத்தானே
வாய்த்திருக்கிறது.
28)சேர்ந்து நிழற்படம்
எடுத்துக் கொண்டு
அடிக்கடி மடல்
எழுதுவதாகச்
சொல்லிக் கொண்டு
பிரிகிற நட்பின் வலியை
மறைத்துக்
கொள்வதற்காகத்தான்
துணைவியிடமும்
பேத்திகளிடமும் கூட
சிரிக்கச் சிரிக்கப்
பேசுகிறார்கள் இவர்கள்.
29) எதைப் பற்றித்தான் நாம்
பேசிக் கொள்ளவில்லை
காதல் காமம்
குல்சாரி
அகிரா குரசோவா
புல்லாங்குழுல்...
காற்றுள் மிதக்கும்
நம்
உரையாடல்களை
மீட்க
நாளையேனும்
ஒரு கருவி
கிடைக்குமா?.
30) கண்களை வாங்கிக்கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை
வாங்கிக் கொண்டு
உன்னைப் போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்.
31) ஒரு ஞாயிற்றுக்கிழமை
மதியத்தில்
தாமதமாய் வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான் சமைத்து வைத்திருந்த உணவை
நிதானமாகச்
சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே
படுத்துத்
தூங்கிவிட்டும் போயிருக்கிறாய்
என்பதைச் சொல்லிப்
பரிகசித்தன
என் தலையணையில் சில
மல்லிகைகள்.

32) என் துணைவியும்
உன் துணைவனும்
கேட்கும்படி
நம்
பழைய
மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்.

33)அந்த பந்தியில் நான்
மேற்பார்வை
செய்து கொண்டிருக்கையில்
உனது
இலையிலிருந்து
காற்றில் பறந்துவந்து விழுந்து
உடைந்ததே
அந்த
அப்பளத்திற்குத் தான்
முதலில் நாம்
நன்றி சொல்ல
வேண்டும்

34) இரண்டு இரவுகள் ஒரு பகல்
ஈரக்காற்றுகளால் நெய்த அந்த
அந்திப்பொழுது
யாவும் பாழாக
அந்தத் தொடர் வண்டிப் பயணத்தில்
எனக்கு எதிரிலேயே
அமர்ந்து தூங்கி
சாப்பிட்டு படித்து
பேசாமலேயே
இறங்கிப் போக பெண்ணே
உனக்குக் கற்றுக்
கொடுத்தது யார்.

35) எனக்குத் தெரியும் நீ சாப்பிடும் நேரத்தின் கடைசி குவளை
தண்ணீரில் இருக்கிறேன்
நான்.

36) அந்த மொட்டை மாடியின்
வெளிச்சம்
குறைந்த இரவின்
தனிமையில் நம்மை
அருகருகே
படுக்க வைத்துவிட்டு
நாம்
பேசிக்கொண்டே
போய் வந்த
பாதைகளைத் தாம்
பகலில்
வண்ணத்துப் பூச்சிகள்
வரைந்து பார்க்கின்றன.

37) நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரியஅண்ணன் தங்கை என்று
ஆரம்பித்தவர்கள்
கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
உண்மையான நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்.

38) உனக்கான பதில்களை
என்னிடமிருந்து
நீ
எதிர்பார்க்காமல்
பேசுகிறபோதெல்லலாம்
தலைமுறைகளைத்
தாண்டிய நம்
பாட்டிகளின்
உறைந்து கிடக்கும்
மௌனங்கள் அனைத்தையும்
நீ உருக்கிக் கொள்கிறாய் என்றே
நான் கருதுகிறேன்.
39)துளியே கடல்
என்கிறது
காமம்
கடலும்
துளி
என்கிறது
நட்பு

40) அந்த விளையாட்டுப்
போட்டியைப்
பார்க்க நாம்
ஒன்றாகச்
சென்றோம்
இரசிக்கையில்
இரண்டானோம்
திரும்பினோம்
மறுபடியும்
ஒன்றாகவே.


41) உனது அந்தரங்கத்தின்
அனுமதியற்ற
எல்லையை
ஒரு நாள் தற்செயலாய்
நான்
மீறிவிட்ட
கோபத்தில்
ஏறக்குறைய
நாற்பது நாட்கள்
என்னோடு நீ
பேசாமல்
இருந்தாய்.
ஓர் அதிகாலையில்
முதலாவதாக எழுப்பி
எனக்கு நீ
பிறந்தநாள் வாழ்த்துச்
சொல்லிய போதுதான்
பிறந்தேன் மறுபடியும்
புதிதாய்
நான்.

42) உனது சிறிய பிரிவிற்கான
வலியைச்
சமாதனப்படுத்திக்
கொள்வதறகாகப்
பெரிய
பிரிவுகளுக்கான
விடைபெறுதல்கள்
நிறைந்த
அந்த
விமான நிலையத்திற்குள் போய்
அமர்ந்து விட்டு
வந்தேன்.

43) போகிற இடத்தில்
என்னை விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்ல
வேளை
நட்பிற்கு
இல்லை.

44) ஆய்வை
முடிக்கிறவரை
காதலனை
வரவேண்டாம் என்று
கட்டளையிட்டாய்
வந்துகொண்டே
இருக்க வேண்டும்
என்று என்னிடம்
கெஞ்சினாய்.

45)உன்னைக்
காதலிப்பவனும்தான்
எவ்வளவு
உயர்ந்தவன்
உணர்ந்து கொண்ட
மெளனத்திற்கென்றே
ஒரு
புன்னகை
இருக்கத்தான்
செய்கிறது
என்பதை அவன்தானே
எனக்குச்
சொல்லிக் கொடுத்தான்.

46)எல்லாவற்றிலும்
எனக்கு பிடித்தததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்கு பிடித்தததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால் தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது

47) சன்னலில்லாத
விடுதி அறையும்
அட்டவணைச் சமையலும்
நம்மை
வாடகைக்கு
வீடெடுக்க வைத்தன
கல்லூரிக்கு
வெளியே
அறைக்குள் வந்து
இல்லறத்காகவே கூடுதேடும்
இந்தச்
சிட்டுகளுக்குத் தெரியுமா
நம் நட்பு?

48) ஒரு நள்ளிரவில்
கதவு தட்டும் ஒலிகேட்டு
வந்து திறந்தேன்
காதலனோடு
கைபிடித்தபடி
சோர்ந்த முகத்தோடு
நின்றாய்
போய் வருகிறேன்
அடுத்த
வாரம் சந்திக்கலாம்
என்று புறப்பட்ட
காதலனுக்குக் கையசைத்தாய்
என் தோளில்
சாய்ந்தபடி.
நன்றி: கவிஞர் அறிவுமதி

13 comments:

Unknown said...

அவ்வளவு தானா...நிறைவுற்ற ஏக்கம் என்னில்...

என்னுள் உறைந்து கிடந்த நட்பு படிமங்களை உயிர்த்துவிட்டு சென்றிருக்கிறது...

Unknown said...

Vera level

Unknown said...

Vera level

Unknown said...

Actually this poem is not for friendship I think so it belongs to love...but nice

Unknown said...

நல்ல கவிதைகள்

Unknown said...

What A Lines Hates off to You Sir....

Unknown said...

கவிதை படிக்கையில் எனக்குள்ளே ஏதோ ஒரு உணர்வு ஏற்ப்பட்டது

Unknown said...

இந்ந கவிதையை பற்றி கட்டுரை வேண்டும்.

Unknown said...

Hii

Unknown said...

எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று அறிவுமதி நடப்புக்கால கவிதைகள்

Unknown said...

இந்த கவிதையை படிக்கையில் ஒரு அமைதி கிடைக்கிறது.

Unknown said...

Very super

தமிழோடு சகவா said...

இக்கவிதைகள் எனக்கு ஒரு புதிய தன்னம்பிக்கையை தருகிறது

Illaya raja Songs

<p> <a href="http://musicmazaa.com/playlists/soori/Ilayaraja+Songs/?e">Listen to soori - Ilayaraja Songs - playlist audio songs at MusicMazaa.com</a></p>